ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் உருவாகியுள்ள நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (இன்று) கடலோர தமிழகம் மற்றும் உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மார்ச் 7 ஆம் தேதி அரியலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8 ஆம் தேதி கோவை, நீலகிரி, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருப்பூர் ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடல் பகுதி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.