வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அது மட்டுமின்றி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழைநீர் மூன்றாவது நாளாக இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது மட்டுமின்றி பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாகப் பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.