
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று (01.03.2025) பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல்- மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (03-03-2025) தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மறுநாள் (04-03-2025) முதல் 08-03-2025 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.