மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும், அதேபோல் தமிழகம், புதுச்சேரியில் நாளை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், சென்னையின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 11 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் விண்ட் ஒர்த் எஸ்டேட் பகுதியில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.