தமிழகத்தில் நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் (14.11.2023) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நவம்பர் 16 ஆம் தேதி மேற்கு - வட மேற்கு திசையில் நகரக்கூடும். இதனையடுத்து மத்திய, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இன்று (12.11.2023) தமிழ்நாடு கடலோர பகுதி, மன்னார் வளைகுடா அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி வங்கக்கடலின் தென்மேற்கு, தென்கிழக்கு பகுதி, அந்தமான கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். நவம்பர் 15 ஆம் தேதி வங்கக்கடலின் மத்திய மேற்கு, மத்திய கிழக்கு பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.