வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று (24.11.2023) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (25.11.2023) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 27 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. நவம்பர் 26 ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் எனக் கணித்திருந்த நிலையில், ஒரு நாள் தாமதமாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.