கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிந்துவரும் நிலையில், நீலகிரி, கோவையிலும் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றும் தேனி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை மற்றும் தேனி மாவட்டத்தில் கனமழை தொடரும். நீலகிரி, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக தமிழகத்தின் முக்கிய அணைகள் நிரம்பி வருகின்றன. கோவையின் பில்லூர் அணை, அமராவதி அணை, சோலையாறு அணை போன்றவை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.