தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் நேற்று (28.09.2024) வெளியிடப்பட்ட வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், தமிழகத்தில் செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய இரு நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (29.09.2024) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதே போன்று தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் நாளை (30.09.2024) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம் சென்னையில் அடுத்த 24 மணி நேரமும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.