சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் 55வயதான லட்சுமி, சென்னை துறைமுக மருத்துவமனையில் உதவியாளராக பணி செய்து வருகிறார். இரவு வேலைகளை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு செல்ல பார்த்தசாரதி சாமி தெருவில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னாலிருந்து வந்த மர்மநபர் ஒருவர், அவரின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
சிறிது தூரம் ஓடிய அந்த மர்மநபர் மற்றொரு நபரிடம் செயினை கொடுத்துவிட்டு மாயமானார். தங்க செயினை பறிகொடுத்த லட்சுமி, ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக விசாரணையை தொடர்ந்த, ஐஸ் ஹவுஸ் போலீசார், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளின் பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதேபகுதியைச் சேர்ந்த பிரபல செயின் பறிக்கும் கொள்ளையன் விஜய் என்ற சொறி விஜய், மற்றும் அவனது தொழில் கூட்டாளி சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதே வழக்கில் 17 வயது சிறுவன் ஒருவன் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த செயின் பறிப்பில் மூன்றுபேர் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மூவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் விஜய் என்ற சொறி விஜயும், சக்திவேலும் இணைந்து 17 வயது சிறுவனுக்கு எப்படி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட வேண்டும் என்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் அந்த சிறுவன் இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் ஐஸ்ஹவுஸ் போலீசார் புகார் அளித்த ஆறு மணி நேரத்திற்குள் மூன்று குற்றவாளிகளை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள சொறி விஜய் பலமுறை குற்ற வழக்குகளில் ஈடுப்பட்டு சிறை சென்றுவந்தவர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் சில சிறுவர்களுக்கு செயின்பறிப்பு பயிற்சி அளித்தாக தெரிய வந்துள்ளது.