திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தன்னை வெற்றி பெறச் செய்தால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 லிட்டர் மதுவை விநியோகம் செய்வதாக தேர்தல் அறிக்கை எனும் பெயரில் நூதன வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
இந்த நூதன வாக்குறுதிகளை அளித்தவர் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் டைலர் ஷேக்தாவூத் என்பவர்தான்.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள அந்த ஊரைச் சார்ந்த ஷேக்தாவூத் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் பெரிய காமெடியையும் இவையெல்லாம் சாத்தியமா என்ற நூதனமான வாக்குறுதிகளாகவும் உள்ளது.
இது பற்றி அவர் கூறும்போது... நான் தவறுக்காக சொல்லவில்லை அனைவரும் மருந்துக்காக சாப்பிடக்கூடிய மதுவை ஒரிஜினல் சுத்தமான மதுவை பாண்டிச்சேரியில் இருந்து இறக்குமதி செய்து குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் 10 லிட்டர் மது மாதமொன்றுக்கு கண்டிப்பாக வழங்கப்படும் என கூறினார்.
அதையும் தாண்டி உச்சகட்டமாக மேட்டூர் அணையில் இருந்து நேராக வாய்க்கால் வெட்டி திருப்பூருக்கு தண்ணீர் கொண்டு வருவேன் என்றும் கூறினார்.இந்த இரண்டாவது வாக்குறுதியை பற்றி அவர் கூறும்போது... மேட்டூரில் இருந்து அந்தியூர், கோபி வழியாக நேராக திருப்பூருக்கே வாய்க்கால் வெட்டி மக்களுக்கு மேட்டூர் குடிநீரை கொடுப்பேன்.
இப்படி சுயேட்சை வேட்பாளர் ஷேக்தாவூத் அளித்த வாக்குறுதி சமூக வலை தளங்களிலும் வைரலாகி வருகிறது.