தேனி அருகே உள்ள நியுட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
துணை முதல்வர் ஓ.பி.எஸ். மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள போடி தொகுதியில் உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் நியுட்ரினோ ஆய்வு திட்டத்தை செயல்படுத்துவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வந்தது. இதற்கான ஆயத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. நியுட்ரினோ திட்டத்தை நிறைவேற்றினால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் என பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அப்பகுதி பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அங்கு நியுட்ரினோ திட்டத்தை செயல்படுத்த முக்கிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. விதிமுறைகளை தளர்த்தி சிறப்பு நிகழ்வாக இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றும் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் சில நிபந்தனைகளோடு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நியுட்ரினோ திட்டத்தை நிறைவேற்ற இருக்கும் நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்தது போலவே தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியையும் பெற வேண்டும். தேனி மாவட்டத்தில் அம்ரப்பர் மலைப்பகுதியில் இத்திட்டம் செயல்படுத்த இருப்பதால் தேசிய வனவிலங்கு வாரியத்திடமும் நியுட்ரினோ திட்டம் துவங்குவதற்கு அனுமதி பெற வேண்டும். இந்த நியுட்ரினோ திட்டத்திற்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தினமும் 3லட்சத்து 40ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அம்பரப்பர் மலை அடிவார பகுதியில் தான் 18ம் கால்வாய் திட்டம் செயல்பட தொடங்க இருக்கிறது. அந்த திட்டம் செயல்பட தொடங்கினால் அதன்மூலமே நியுட்ரினோ திட்டத்திற்கு தண்ணீர் எடுக்க இருக்கிறார்கள். ஆனால் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பொட்டிபுரம் பஞ்சாயத்தில் உள்ள புதுக்கோட்டை, புதூர், சின்னபொட்டிபுரம், பெரியபொட்டிபுரம் உள்பட அப்பகுதியைச் சேர்ந்த சில கிராமங்களுடன் தொகுதி மக்களும் தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம், போடி, கோம்பை, சின்னமனூர் உள்பட மாவட்ட அளவில் உள்ள பல ஊர்களில் இந்த நியுட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வைகோ உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் நியுட்ரினோ திட்டம் இப்பகுதியில் செயல்பட தொடங்கினால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும். அதோடு அப்பகுதி மக்களின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படும், அதோடு அப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஆடு, மாடுகளை வைத்துக்கொண்டு அந்த அம்பரப்பர் மலைப்பகுதியில் மேயவிட்டுத்தான் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
அப்படி இருக்கும் போது இப்பகுதியில் நியுட்ரினோ திட்டம் வந்தால் ஆடு, மாடு மேய்ச்சலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் கூட நியுட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திடீரென அனுமதி கொடுத்திருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இருந்தாலும் இத்திட்டத்தை செயல்படுத்த ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரவும், தொடர்ந்து இப்பகுதியில் நியுட்ரினோ திட்டம் செயல்படுத்த கூடாது என போராட்டத்தில் குதிக்கவும் தயாராகி வருகிறார்கள்!