திருவண்ணாமலை நகரம் ஆன்மீகத்தின் முக்கியமான நகரம். அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலம் வர தினமும் ஆயிரக்கணக்கிலும், பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா, சித்திரை மாத பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நகரில் உள்ள ரயில் நிலையம் சரியான வசதிகள் இல்லாமல் உள்ளது.
இதுப்பற்றி திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான சி.என்.அண்ணாதுரை கவனத்துக்கு பொதுமக்கள் பலர் கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு இரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். அங்குள்ள குறைபாடுகளை அறிந்துக்கொண்டார். இது தொடர்பாக கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, நாடாளுமன்றத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் உள்ள குறைபாடுகளை குறிப்பிட்டு பேசினார்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை ரயில் நிலையத்தை மேம்படுத்த 2.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்க இரயில்வே நிர்வாகம் ஒப்புதல் தந்துள்ளது. இந்நிலையில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து இரயில்வே அதிகாரிகளுடன் செப்டம்பர் 12ந் தேதி ரயில் நிலையத்தில் ஆலோசனை நடத்தி, தன் கருத்துக்களை தெரிவித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சி.என்.அண்ணாதுரை, திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும். திண்டிவனம் டூ திருவண்ணாமலைக்கு ரயில் பாதை இயக்க வேண்டும், ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என மத்தியரசிடம் வலியுறுத்தி வந்தேன். அதனைத் தொடர்ந்து ரயில்நிலையத்தில் கழிப்பறை, குடிநீர்வசதி, மின்விளக்குகள், நடைபாதை நீட்டித்து தருதல், பயணிகள் தங்கும் விடுதிகள், பெயர்பலகை, ரயில் நிலையத்தில் மேற்கூரை போன்றவற்றை செய்ய தற்போது முதல்கட்டமாக நிதி ஒதுக்க நிர்வாக அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த நிதியை வேகமாக ஒதுக்கி, பணிகள் செய்ய வலியுறுத்துவேன்.
அதோடு, விழுப்புரம் டூ காட்பாடி இடையே ஒருபாதை தான் உள்ளது. அதனைத் இரட்டை பாதையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன், அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. திண்டிவனம் டூ திருவண்ணாமலை ரயில்பாதை அமைக்க 1,200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது. இன்னமும் நிதி ஒதுக்கவில்லை. கிருஷ்ணகிரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து தொடங்கி முடிக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளேன். அமைச்சரை சந்தித்தும் முறையிட்டுள்ளேன். வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் இதுக்குறித்து பேசவுள்ளேன்.
தமிழகத்தை பொறுத்தவரை மத்தியரசு புறக்கணிக்கிறது. தமிழக ரயில் திட்டங்களுக்கு மத்தியரசு முக்கியத்துவம் தருவதில்லை. பல பணிகளுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுகிறது என்றார்.