இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்து மீனவர்களை பாதுகாத்திட வேண்டுமென மீனவர் குறைதீர் கூட்டத்தில் நாகை மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் மீனவர் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை, வேதாரண்யம் கீழ்வேளூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை கூறினர்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி தங்களின் படகில் உள்ள ஜி.பி.எஸ், வாக்கிடாக்கி, வலைகளை பறித்து செல்வதாகவும், மீனவர்களை கடுமையாக தாக்குவதாகவும் இதனால் கடலுக்கு செல்லவே அச்சம் ஏற்படுகிறது என்று தெரிவித்தனர். மீனவர்கள் சுதந்திரமாக தொழில் செய்ய மத்திய மாநில அரசுகள் முழு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுந்தமாவடி, காமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். பெரும்பாலான மீனவ கிராமங்களில் ஆற்றின் முகத்துவாரம் மணலால் சூழப்பட்டுள்ளதால் முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளை தூர்வார வேண்டுமென கோரிக்கை விடுத்ததோடு, பேரிடர் காலங்களில் கடல் நீர் கிராமங்களுக்குள் உட்புகாமல் இருக்க கருங்கற்களால் ஆன தடுப்புகளை அமைத்து தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன்பிடி தடைகால நிவாரணத்தை உடனடியாக வழங்குவதோடு, டீசல் மானியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டுமெனவும் மீனவர்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர் .தொடர்ந்து 57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.