Skip to main content

மத்திய,மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து CPIMவீடுவீடாக மக்கள் சந்திப்பு இயக்கம்

Published on 05/08/2017 | Edited on 05/08/2017
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத 
நடவடிக்கைகளை எதிர்த்து 
CPIM வீடு வீடாக மக்கள் சந்திப்பு இயக்கம்
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக்குழுவின் அறைகூவலுக்கு இணங்க மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து  2017 ஆகஸ்ட் 18 முதல் 23 வரை தமிழகம் முழுவதும் கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை வீடு வீடாகச் சென்று மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு 
முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தோழர்கள் உள்பட அனைவரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்களாகச் சென்று இவ்வியக்கத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

மத்திய நரேந்திர மோடி அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், உழைப்பாளர்கள், சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள் மீது மோசமான தாக்குதலை தொடுத்தது. அத்தாக்குதலிலிருந்து மீள்வதற்குள்ளாக மேலும், அதிகப்படியான தொடர் தாக்குதல்களை கட்டவிழ்த்துள்ளது. பெட்ரோல் டீசல் விலையை அன்றாடம் தீர்மானிப்பது, சமையல் எரிவாயுக்கான மானியங்களை வெட்டி குறைப்பது, மண்ணெண்ணெய் மானியத்தை குறைப்பது, அனைத்துக்கும் மேலாக ஜி.எஸ்.டி.யை திணித்து அனைத்து பகுதி மக்களது வாழ்வாதாரத்தையும் பறித்துள்ளது. 

துவக்கத்தில் பன்முக வரியினை ஒருமுகப்படுத்துவதற்கு தான் ஜி.எஸ்.டி. என உறுதியளித்த மத்திய அரசு தற்போது அனைத்து பொருட்களுக்கும் பல மடங்கு வரிகளை உயர்த்தி மக்களை வதைத்துக் கொண்டுள்ளது. கடந்த தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதி அடிப்படையில் விவசாய விளை பொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான குழுவின் சிபாரிசு அடிப்படையில் விலை தீர்மானிக்க மறுத்து வருகிறது. பெருமுதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்றுள்ள பல லட்சம் 
 
கோடி ரூபாய்கள் கடன்களை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு விவசாயிகளது கடன்களை தள்ளுபடி செய்திட மறுத்து வருகிறது. பொருளாதார தாக்குதல்களை தீவிரப்படுத்திக் கொண்டுள்ள அதே நேரத்தில் மறுபக்கம் மதவெறி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. மாடுகள், ஒட்டகங்கள் உள்ளிட்டவைகளை இறைச்சிக்கு விற்க கூடாது என புதிய விதிகளை உருவாக்கி விவசாயிகளது வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளதோடு மறுபக்கம் மாட்டிறைச்சி உணவு உட்கொள்ளும் மக்களின் உணவு உரிமையையும் பறித்துள்ளது. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ அமைப்பினர் சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். 

தமிழ்நாட்டின் மோசமான வறட்சிக்கு போதிய நிதியினை மத்திய அரசு வழங்கிடவில்லை. காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைக்க மறுத்தது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக மாணவர்களது மருத்துவ படிப்பில் மண்ணைப்போடும் வகையில் நீட் தேர்வை அமல்படுத்தியுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென்ற 
கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ளது. இத்தகைய தமிழக விரோத மத்திய அரசின் நடவடிக்கைகள தட்டிக்கேட்க திராணியற்ற அரசாக தமிழக அரசு உள்ளது மட்டுமின்றி மத்திய பாஜக அரசின் ஊதுகுழலாகவே தமிழக அரசு மாறியுள்ளது. 

கிரானைட், தாதுமணல் கொள்ளைகள் குறித்து விசாரணைக்குழுக்களின் அறிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது. மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்த மக்களின் போராட்டங்கள் நீண்டு நீடித்து வருகின்றன. *விவசாய விளைபொருட்களுக்கு அடக்கவிலையோடு 50 சதமானம் சேர்த்து விலை தீர்மானிக்க வேண்டும், இந்த விலை விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தினை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும்,  

*விவசாயிகளது கடனை தள்ளுபடி செய்திட வேண்டும்,  

*ஜி.எஸ்.டி மூலம் உயர்த்தப்பட்ட வரிவிதிப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும்,  

*ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்ற வாக்குறுதியை அமலாக்கிட வேண்டும், 

*பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும், 

*2014 தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை நிறைவேற்றிட வேண்டும், 

*தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பை சீர்குலைக்க புகுத்தியுள்ள நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு வழங்கிட வேண்டும். 

*உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி, ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு  வருமானம் உள்ள குடும்பங்களுக்கும், 5 ஏக்கர் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட பலருக்கு இனி மானிய விலையில் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் இதனால் ஏற்கனவே உள்ள பயனாளிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்ற தமிழக அரசின் அறிவிப்பு மட்டும் போதுமானதல்ல. இத்திட்டத்தை தொடர்ந்து வழக்கம் போல் செயல்படுத்திட கூடுதல் நிதி ஒதுக்கி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.  

*கடலூர், நாகை மாவட்டங்களில் தமிழக அரசு பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ரசாயன சிப்காட் செயல்பட்டு வரும் கடலூர் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளான பகுதியாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மேற்கண்ட பெட்ரோ கெமிக்கல் மண்டல அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பொதுமக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தி பொதுமக்களது ஒப்புதலின்றி மேற்கண்ட திட்டத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.  

*தமிழக அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் எழுந்து வருகின்றன. ஊழல் நடவடிக்கைகளின் விளைவாக சொத்துகள் முடக்கப்பட்டுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும், விசாரணை முடியும் வரை அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும், இதர அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. 

*டெங்கு காய்ச்சலால் தமிழ்நாட்டில் மரணங்கள் தொடர்கின்றன. இதற்கான சிறப்பு சிகிச்சை ஏற்பாடுகளை அனைத்து தாலுகா மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் உருவாக்கிட வேண்டும். மாநிலம் முழுவதும் தீவிர கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.  

*மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இருதயம், புற்றுநோய் உள்ளிட்ட சில முக்கிய மருத்துவ பிரிவுகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தை கைவிட வேண்டும்.  

*மக்கள் பிரச்சனைகளை வலியுறுத்தி போராடியதற்காக பல்வேறு வழக்குகள் மற்றும் குண்டர் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் இறுதி நாளான 2017 ஆகஸ்ட் 23 அன்று தமிழகம் முழுவதும், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்திட மாநிலக்குழு தீர்மானித்துள்ளது.  

மதவெறி எதிர்ப்பு இயக்கம் மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வரும் மதவெறி நடவடிக்கைகளை 
எதிர்த்தும், பசு பாதுகாப்பு குழு என்ற பெயரில் நடத்தி வரும் வன்முறை வெறியாட்டங்களை எதிர்த்தும், ஆர்.எஸ்.எஸ்-ன் கலாச்சார பாதுகாப்பு படைகளை தடை செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கூட்டங்களில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் பங்கேற்கச் செய்து மதவெறி எதிர்ப்பு குரலை வலுப்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. 

நடைபெறும் இப்பேரியக்கங்களுக்கு தமிழக பொதுமக்கள் அனைவரும் பேராதரவு அளித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 

சார்ந்த செய்திகள்