கடந்த 7ஆம் தேதி தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கையில், ‘நாடு முழுவதும் உள்ள அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கான நிலக்கரி கையிருப்பு என்பது குறைந்து வருகிறது. இதனால் விரைவில் நிலக்கரி தட்டுப்பாடு என்பது உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சிமெண்ட் உற்பத்தி செய்யும் ஆலைகளில் முக்கிய எரிபொருள் நிலக்கரி என்பதால் அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டியுள்ளது. இதனால் 50 கிலோ எடை கொண்ட ஒரு சிமெண்ட் மூட்டையின் உற்பத்தி விலை 60 ரூபாய் அதிகரிக்கும் நிலை உள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கரோனா ஊரடங்கிற்குப் பிறகு கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் சிமெண்ட் விலையேற்றம் என்பது நுகர்வோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் டான்செம் நிறுவனத்தின் சிமெண்ட் 'வலிமை' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், வலிமை சிமெண்ட் அறிமுகமாகி வெளியே வந்தால் சிமெண்ட் விலை குறையும் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “சிமெண்ட் விலையை மேலும் 20 ரூபாய் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. சிமெண்ட் விலை 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிமெண்ட் மூட்டை விலை தற்போது 420 ரூபாயிலிருந்து 440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் வலிமை சிமெண்ட் மாதம் ஒன்றிற்கு 30 ஆயிரம் மெகா டன் விற்கப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.