கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இருந்து சிமெண்ட் கலவை தொழிலாளிகள் தங்கள் பணிகளை முடித்துவிட்டு 15க்கும் மேற்பட்டோர் கலவை வாகனத்தில் தங்களது வீட்டிற்கு சென்றனர். அப்பொழுது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் மேம்பாலம் அருகில் வாகனம் செல்லும் போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சிமெண்ட் கலவை வாகனத்தில் சென்ற மூன்று பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தகவல் அறிந்து காவல்துறையினர் அங்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை உடல் கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் காவல் துறையினர் விபத்தில் சிக்கிக் கொண்ட வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். மேலும், விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த சிமெண்ட் கலவை தொழிலாளிகள் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் ஏற்பட்டதால் அந்த கிராமமே பெரும் சோகத்தில் உள்ளது.