மதுரை, திண்டுக்கல் மெயின் ரோட்டில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைக்கும் பணி ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் நடைபெற்று வருகிறது. இதில் பெத்தானியாபுரம் பகுதியை ஒட்டிய வைகை ஆற்றுப் பாலம் பகுதியின் கீழ்ப்பகுதியில் சாலைகள் அமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது அங்கு சாலைகள் அமைப்பதற்கு, காங்கிரீட் கலவை எந்திரத்துடன் கூடிய லாரிமூலம் கலவை கொண்டு வரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (16.10.2020) மாலை 5.45 மணி அளவில் கான்கிரீட் கலவை கொண்டுவந்த லாரி ஒன்று திடீரென்று அங்கு தோண்டப்பட்டு இருந்த 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த தாளமுத்து, விருதுநகர் மாவட்டம் ஆத்தூர் அருகே வெல்லூரைச் சேர்ந்த மாரீஸ்வரன் ஆகிய இருவரும் லாரிக்கு அடியில் சிக்கி உயிருக்குப் போராடினர்.
அவர்களை பொதுமக்கள், மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்டனர். இதில் மாரீஸ்வரன் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து விட்டார். தாளமுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிமெண்ட் கலவை கலக்கும் காங்கிரிட் லாரியை கிரேன் மூலம் தூக்கும் பணி நடைபெற்றது. இந்தச் சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.