மொபைல் போன் கடையினை அடித்து உடைத்து 13 செல்போன்களை கொள்ளையடித்ததோடு மட்டுமில்லாமல், அங்கிருந்த கடை உரிமையாளரின் மண்டையையும் உடைத்துத் தப்பித்துள்ளது சென்னைத் தலைமை செயலக ஊழியர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 9 நபர்கள் கொண்ட டீம். காவல்துறையும் பெயருக்கு வழக்குப் பதிந்துவிட்டு இன்னும் தேடிக்கொண்டிருப்பதாய் அறிக்கையை மட்டும் வாசித்து வருகின்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மரைக்காயார் பட்டிணத்தை சேர்ந்தவர் 65 வயதான குமரேசபாண்டியன். ஓய்வுப்பெற்ற சுகாதாரத்துறை அதிகாரியான இவருக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் வருவாய் ஆய்வாளர் கோகுல்நாத் என்பவருக்கும் பொதுவழிப்பிரச்சினை தொடர்பாக ஏறக்குறைய 11 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவும் குமரேசபாண்டியன் குடும்பத்தினருக்கு சாதகமாய் அமைந்திருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கி இதனை நிறுத்தி வைக்க தனக்கு சொந்தமான வீட்டின் பின்பகுதியினை இடித்துவிட்டு புதிய கட்டுமானப் பணியினை துவங்கியிருக்கின்றார் குமரேசபாண்டியன்.
ஏற்கனவே இருந்த முன்விரோதத்தின் காரணமாக "இங்கு காரை நிறுத்தக் கூடாது. புதிய கட்டுமானப் பணியினையும் துவக்கக்கூடாது." என பணிக்கு வந்திருந்த கட்டிடத்தொழிலாளிகளை விரட்டி விட்டிருக்கின்றனர் வருவாய் ஆய்வாளர் குடும்பத்தினர்.
நடந்த சம்பவங்களை புகாராகக் காவல்துறையிடம் கூற, ஆளுங்கட்சியின் செல்வாக்கு, அரசு அதிகாரிகள் என்ற காரணத்தினால் புகாரைத் தட்டிக் கழித்திருக்கின்றது பரமக்குடி நகரக் காவல் நிலையம்.
தங்கள் மீது புகார் கொடுத்துள்ள தகவல் எதிர்த்தரப்பினருக்குத் தெரியவர வருவாய் ஆய்வாளர் கோகுல்நாத், சரவணன், சென்னை தலைமை செயலக கண்காணிப்பாளர் நளினி, மங்கையர்கரசி, நாகநாதன், சேதுராமன், ரத்தினவேல்பாண்டி, அனீஷ், சவுந்தரவள்ளி உள்ளிட்ட 9 நபர்கள் கிருஷ்ணா தியேட்டர் அருகிலுள்ள கலாம் மொபைல் கடையை அடித்து நொறுக்கி, அங்கிருந்த 13 மொபைல் போன்களையும் கொள்ளையடித்துவிட்டு கடையின் உரிமையாளரான குமரேசபாண்டியனின் மண்டையையும் உடைத்துவிட்டு சென்றிருக்கின்றது அந்த கும்பல்.
உள்ளூர் காவல் நிலையம் கண்டுக்கொள்ளாமலிருக்க இப்பிரச்சனை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் மாவட்ட எஸ்.பி.க்கு செல்ல அவருடைய தலையீட்டின் பெயரில் குறிப்பிட்ட 9 நபர்களின் மீதும் கொள்ளையடித்தப் பொருட்கள் குறித்தும் வழக்குப் பதிவு செய்துள்ளது பரமக்குடி நகரக் காவல்நிலையம். எனினும் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது தான் பாதிக்கப்பட்டோரின் ஆதங்கம்.