திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் சாலையில் நடந்து செல்பவர்கள் கையில் போன் வைத்திருந்தால் அல்லது பேசிக்கொண்டு சென்றால் பைக்கில் வரும் இளைஞர்கள் சர்ரென மொபைல்போனை பறித்துக்கொண்டு செல்வது வாடிக்கையாக நடந்துவருகிறது.
இந்த திருடர்களை பிடிக்க போலீஸார் பலவழிகளில் முயன்றும் ஒருசிலர் ஓரிரு மாதத்துக்கு முன்பு சிக்கினர், அதன்பின்னர் யாரும் சிக்கவில்லை. செல்போன் பறிப்பும் நின்றதாகயில்லை. அதிலும் குறிப்பாக சிறுவர்கள் செல்போன் எடுத்துச்சென்றால் அதனை பறிப்பது அடிக்கடி நிகழ்ந்துக்கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தந்தால் கண்டுபிடித்து தருகிறோம் எனச்சொல்லி அனுப்பிவிடுகின்றர். இதனால் பொதுமக்களும் அதிருப்தியில் இருந்தனர்.
ஜனவரி 20ந் தேதி மதியம் ஏ கஸ்பா பகுதியில் ஒரு சிறுவனிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு இருவர் ஓடியுள்ளனர். இதனை தொடர்ந்து ஜனவரி 21ந் தேதி ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஒரு பெண்மணியிடம் இருந்து ஒருவன் செல்போன் பறித்துக்கொண்டு ஓடினான். அப்பெண்மணியும், அங்கிருந்தவர்களும் கத்த இளைஞர்கள் சிலர் துரத்திக்கொண்டே பின்னால் ஓடினர். ஆம்பூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள கரீம் சாலையில் ஓட, பின்னால் ஓடிய இளைஞர்களும், அங்குள்ள கடைக்காரர்களும் பின்னால் துரத்திசென்று அவனை பிடித்தனர்.
35 வயது மதிக்க ஒருவன் சிக்கினான். அவனை பிடித்து நாலு சாத்து சாத்தி ஆம்பூர் காவல்நிலையத்தில் ஓப்படைத்தனர். அவனிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் பேரணாம்பட்டு நகரத்தை சேர்ந்தவன் என தெரியவந்துள்ளது. பேரணாம்பட்டு, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் செல்போன் திருடியவன் என முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.