ஈரோடு மாவட்டத்தில் கிராம பகுதிகளில் தைப்பூசத்துக்கு 5 நாட்கள் முன்பாகவே நிலவுக்கு மரியாதை செய்யும் வகையில் நிலாச்சோறு திருவிழா நடைப்பெற்று வருகிறது. முதல் நான்கு நாட்கள் தினமும் இரவில் ஊர் பெண்கள் ஒன்றுகூடி ஊரின் முக்கிய இடத்தில் கும்மியடித்து தாங்கள் கொண்டு வந்த உணவுப் பதார்த்தங்களை பங்கிட்டு உண்டு மகிழ்வார்கள்.
ஐந்தாவது நாள் இரவில் திருமண நிகழ்ச்சி போல் நடத்துவர். இதேபோல் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலாச்சோறு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி களிமண்ணில் இரு உருவ பொம்மை செய்து மணமகன், மணமகளாக கருதி தேங்காய் பழம் படைத்தனர். அந்த உருவ பொம்மையை சுற்றி பெண்கள் பாட்டுபாடி கும்மி அடித்தனர் நள்ளிரவு வரை கும்மி அடித்து கொண்டாடினர்.
ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை மொடக்குறிச்சி, சிவகிரி, ஈரோடு, அந்தியூர், பவானி, பெருந்துறை உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த நிலாச்சோறு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் கைகட்டி வலசு திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றுகூடி நிலாச்சோறு திருவிழாவை சிறப்பாக நடத்தினர்.
நேற்று இரவு விடியவிடிய கும்மியடித்து மகிழ்ந்தனர். இது குறித்து விழாவில் பங்கேற்ற பெண்கள் கூறும்போது, இந்த திருவிழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் கைத்தறி மற்றும் விவசாயம் செழிக்கும் மும்மாரி மழை பொழியும் என்பது ஐதீகம். மேலும் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி ஒற்றுமையை வலியுறுத்தி நிலாச்சோறு விழா நடத்துகிறோம் என்றனர்.