மெட்ராஸ் மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் தேதி, தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18 அன்று கொண்டாடப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க இந்த ஆண்டு ஜூலை 18 தமிழ்நாடு நாள் விழா பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மாளிகையில் இன்று (18.07.2024) நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை அருள் வரவேற்புரையும், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர். காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர், சி.வி.எம்.பி. எழிலரசன் மற்றும் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் தலைமையுரையும், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விழாச் சிறப்புரையும் ஆற்ற உள்ளனர்.
மேலும் ஆழி. செந்தில்நாதன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அதில் "தமிழ்நாடு வாழ்வும் வரலாறும்" என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானாவும், "சென்னை மாகாணமும் செயற்கரிய போராட்டங்களும்" என்ற தலைப்பில் சிவ.சதீஸும், "சென்னை மீட்பும் வரலாறும்" என்ற தலைப்பில் அனு கிரகாவும், ."திராவிட இயக்கத் தலைவர்களும் நவீன தமிழ்நாடும்" என்ற தலைப்பில் சூர்யா கிருஷ்ணமூர்த்தியும், "தமிழ்நாடு பெயர்மாற்றப் போராட்ட வரலாறு" என்ற தலைப்பில் மா.மதன் குமாரும் கருத்துரையாற்ற உள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு நாள் குறித்த தனது வாழ்த்து செய்தியை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா தமிழக சட்டப்பேரவையில் தமிழ் நாடு பெயர் சூட்டி பேசிய வீடியோ காட்சியை பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க. களங்கண்டு, கலை கண்டு, கவின் கொண்ட தமிழ்நாடு வாழ்க. உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க. ஜூலை 18, தமிழ்நாடு நாள், தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க” எனப் பேசியுள்ளார்.