சேலம் சரகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது. ஏப். 4ஆம் தேதியுடன் பரப்புரை நிறைவு பெறுகிறது. வரும் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
கடந்த தேர்தல்களின்போது நிகழ்ந்த சர்ச்சைகள், நக்சல்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரகத்தில் மொத்தம் 10,227 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1,149 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குப்பதிவை வெப் கேமரா மூலம் கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூர் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மட்டுமின்றி துணை ராணுவத்தினரும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறுகையில், ''சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகளில் 223 வாக்குச்சாவடிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 240, தர்மபுரி மாவட்டத்தில் 400, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 286 என மொத்தம் 1,149 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு, இங்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, வெப் கேமரா செயல்பாடுகள் குறித்து ஒத்திகை பார்க்கப்படும். முதல் ஒத்திகை ஏப். 3ஆம் தேதி நடத்தப்படும். இறுதி ஒத்திகை ஏப். 5ஆம் தேதி நடத்தப்படும். வாக்காளர்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றனர்.