திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிபாளையத்தில் இயங்கிவரும் எஸ்பிஐ வங்கியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பான அதிரவைக்கும் காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.
வங்கியின் லாக்கர் உடைக்கப்பட்ட இந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரிக்க திருப்பூர் காவல் ஆணையர் திஸா மிட்டல் தலைமையில் 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்ஸ்கள் கொண்ட 11 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது வரை 18 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருக்கிறது. நகை எவ்வளவு கொள்ளை போயிருக்கிறது என இன்னும் அதிகாரபூர்வமாக தெரியவில்லை. கடந்த வருடம் அக். 3 ஆம் தேதியே இந்த வங்கியில் கொள்ளை முயற்சி நடந்திருந்தது. இதனால் உஷரான ஊழியர்கள் போலீசாரிடம் புகாரளித்த நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலுக்கு வைக்கப்பட்டார். சில வாரங்களுக்கு முன்பாகத்தான் அந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் வங்கியின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.