நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் மீது முறைகேடு புகார் எழுந்துள்ளதாக கூறி சில மாதங்களுக்கு முன்பு அவரை போலிசார் கைது டெல்லி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு பிணையில் வெளிவந்த அவர் நாடாளுமன்ற கூட்டத்தில் ஆளும் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் அவர் தொடர்பான வழக்கு விசாரணையை மேற்கொண்டு வரும் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இன்று காலை அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. சென்னை, மும்பை உள்ளிட்ட 7 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கார்த்தி சிதம்பரம் , "ஒரு வழக்கு தொடர்பாக எத்தனை முறைதான் சோதனை நடத்துவார்கள் என்று தெரியவில்லை, எத்தனை முறை சோதனை நடந்தது என்று எனக்கே நினைவில்லை" என்று ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.