தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பவானிசாகர் (தனி), வால்பாறை (தனி), திருப்பூர் வடக்கு, சிவகங்கை, திருத்துறைப்பூண்டி (தனி), தளி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
இத்தொகுதிகளில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை, வருகிற 14ஆம் தேதி நடந்துகிற மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் அறிவிக்க உள்ளது. இந்த நிலையில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக சில உத்தேசப் பட்டியல்கள் மூலம் தெரியவருகிறது. அதன்படி, பவானிசாகர் (தனி)- பி.எல். சுந்தரம் முன்னாள் எம்.எல்.ஏ., வால்பாறை (தனி)- ஆறுமுகம் முன்னாள் எம்.எல்.ஏ., திருப்பூர் வடக்கு- ரவி மாவட்டச் செயலாளர், சிவகங்கை- குணசேகரன் முன்னாள் எம்.எல்.ஏ., தளி- ராமச்சந்திரன் முன்னாள் எம்.எல்.ஏ., திருத்துறைபூண்டி- முன்னாள் எம்.எல்.ஏ. கோ.பழனிச்சாமி முதல் கட்சியில் உள்ள நான்கு முக்கிய நிர்வாகிகள் பெயர் பரிசீலனையில் உள்ளது. குறிப்பாக, இளைஞர் பெருமன்ற முன்னாள் மாநிலச் செயலாளர் த.லெனின் பெயரும் அடிபடுகிறது. மேற்குறிப்பிட்டவை ஒரு உத்தேசப் பட்டியலே இதில் மாற்றங்களும் நிகழலாம்.