புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தினக்கூலி ஊழியர்களாக 1,400 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் ரூ. 2.45 கோடி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களை கண்காணிக்கும் அதிகாரிகள், தினக்கூலி ஊழியர்களில் சிலரை மட்டும் பணிக்கு வைத்து விட்டு, பலர் பணிக்கு வந்தது போல கணக்கு காட்டி பல கோடி ரூபாய்களை கடந்த சில ஆண்டுகளாக முறைகேடு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதேபோல உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு, பணியாளர்களை கையூட்டு பெற்றுக்கொண்டு நியமித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக ஜிப்மர் ஊழியர்கள் சங்கத்தினர் சிபிஐக்கு புகார்கள் அனுப்பினர்.இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் திடீர் ஆய்வில் ஈடுபட்டு சில ஆவணங்களை பறிமுதல் செய்ததுடன், முறைகேடாக பணியாளர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பாக சிலரிடம் விசாரித்து விட்டுச் சென்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென ஜிப்மர் வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்துக்கு வந்த 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள், கண்காணிப்பு மற்றும் நிர்வாகப் பிரிவு எழுத்தர்கள் இருவரிடமும், நிர்வாகப் பிரிவு அதிகாரிகள் சிலரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் இந்த ஆய்வில் ப்ல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.
இதேபோல் புதுச்சேரி சாரத்திலுள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகம், உழவர்கரை நகராட்சி அலுவலகம், புதுச்சேரி நகராட்சி மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 கொம்யூன் பஞ்சாயத்துகள் உட்பட பல்வேறு இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புதுச்சேரியின் முக்கிய இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதால் அதிகாரிகள் பீதியில் உள்ளனர்.