சேலம் அருகே ஆறு பேர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, வழக்கில் முடக்கி வைக்கப்பட்ட சொத்துகளை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சேலம் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் குப்புராஜ் (78). ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். இவருடைய மனைவி சந்திராம்மாள் (72), மகன் ரத்தினம் (45), மருமகள் சந்தானகுமாரி (40), பேரன் கவுதமன் (20), பேத்தி விக்னேஸ்வரி (13) ஆகியோர் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி இரவு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். குப்புராஜின் மூத்த மகன் சிவகுரு (48), அவருடைய மகன் கோகுல் (17) ஆகிய இருவரும் தாங்கள்தான் 6 பேரையும் சொத்துக்காக கொலை செய்தோம் என்றுகூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்த மல்லூர் காவல்துறை, இந்த வழக்கு தொடர்பாக சிவகுரு, கோகுல் ஆகியோர் மட்டுமின்றி, சிவகுருவின் மனைவி மாலா (42), மகள் யுவபிரியா (32), ஆயுதப்படை காவலரும் மருமகனுமான ரஜினி (35), திமுக பிரமுகரும் அப்போதைய மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவருமான பாரப்பட்டி சுரேஷ்குமார் (37), அவருடைய உதவியாளர் அம்மம்பாளையம் செந்தில்குமார், வழக்கறிஞர் திருஞானசம்பந்தமூர்த்தி என்கிற சம்பத், திமுக பிரமுகரான வெடிகாரன்புதூர் சேகர் (40) ஆகிய 9 பேரை கைது செய்தனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசராணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணை சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மொத்தம் 1440 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, இந்த கொலை வழக்கில் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி, பாரப்பட்டி சுரேஷ்குமாரை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. இதற்கிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிவகுரு கடந்த 18.10.2016ம் தேதி உயிரிழந்தார். அவருடைய மனைவி மாலாவும் உடல்நலமில்லாமல் இறந்து விட்டார். இந்தக் கொடூர கொலை, சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் நடந்தது என்பது விசாரணையில் ஊர்ஜிதமானது. குப்புராஜூவுக்கு சிவகுரு, ராமலிங்கம், ரத்தினம் ஆகிய மூன்று மகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் இருந்தனர். ரயில்வே காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த ராமலிங்கம், விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். கருணை அடிப்படையில் அவருடைய மனைவிக்கு ரயில்வேயில் வேலை வழங்கப்பட்டது. மூத்த மகன் சிவகுருவுக்கு 12 வீடுகளை குப்புராஜ் கிரயம் செய்து கொடுத்துள்ளார். அந்த வீடுகள் மூலம் கிடைத்து வந்த வாடகை வருமானம் மூலம் சிவகுரு வாழ்ந்து வந்தார். மற்றொரு மகனான ரத்தினம், லாரி ஓட்டி வந்தார். ராமலிங்கம் இறந்துவிட்டதால் அவருடைய மகன் கார்த்திக்கிற்கு இரண்டரை ஏக்கர் நிலத்தை தானப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து மீதம் இருந்த 4 ஏக்கர் நிலத்தை, ரத்தினத்திற்கு எழுதிக் கொடுத்தார். குப்புராஜூடன் ரத்தினம் குடும்பத்துடன் வசித்து வந்தார். இதற்கிடையே, சிவகுருவுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால், அவருக்கு சகோதரி விஜயலட்சுமி சிறுநீரகம் தானம் கொடுத்தார். மகனின் மருத்துவச் செலவுக்காக ஒரு சொத்தை விற்பனை செய்த குப்புராஜ் 20 லட்சம் ரூபாய் செலவு செய்தார். இந்நிலையில் ரத்தினத்திற்கு கிரயம் செய்து கொடுத்த நிலத்தின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது. இதையறிந்த சிவகுருவுக்கு அந்த நிலத்தின் மீது ஆசை ஏற்பட்டது. அந்த நிலத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டு குப்புராஜூக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்தார். மருத்துவச்செலவு, ஜீவனத்திற்கு 12 வீடுகளை எழுதிக் கொடுத்துவிட்டேன். இனிமேல் சொத்தில் சல்லிக்காசு கூட கிடையாது என்று குப்புராஜ் கறாராக கூறிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவகுரு, பெற்றோரையும், அவர்களுடன் வசித்து வந்த அண்ணன் உள்ளிட்ட குடும்பத்தினரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
அதையடுத்து சிவகுரு, தனது மகன் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து கொலைத் திட்டத்தை அரங்கேற்றியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்தக் கொலையே சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் நடந்தது தான். அதனால் வழக்கு முடியும் வரை குப்புராஜ் மற்றும் சிவகுரு தரப்பினர் யாரும் சர்ச்சைக்குரிய சொத்துகளை அனுபவிக்க முடியாது. நிலைமை இவ்வாறு இருக்க, சர்ச்சைக்குரிய 4 ஏக்கர் நிலத்தை, வழக்கு முடிவடைவதற்கு முன்பே குப்புராஜின் வாரிசுகள் 5 பேர் கையெழுத்திட்டு கடந்த பத்து நாள்களுக்கு முன்பு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டது தெரிய வந்துள்ளது. இந்த தகவலே சிபிசிஐடி காவல்துறைக்கும் தற்போதுதான் தெரிய வந்துள்ளதால், அவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆறு பேர் கொலை வழக்கில் சாட்சிகள் மீதான விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. பிப். 28ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து, பத்திரவுப்பதிவுத்துறைக்கு சிபிசிஐடி தரப்பில், சர்ச்சைக்குரிய சொத்தை வழக்கு முடியும் வரை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என கடிதம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்படும் என சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது.