புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இறுதிக்கட்டத்தில் குறிப்பிட்ட சிலரிடம் விசாரணை நெருங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளிகளாக்க நினைக்கிறது போலிஸ், அதனால் விசாரணையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இறுதிக் கட்டத்தை எட்டியதாக விசாரணைக் குழு சொன்னபோது, இந்த விசாரணைக் குழுவையும் மாற்ற வேண்டும் இந்தக் குழுவும் எங்களையே குற்றவாளிகளாக மாற்றப் பார்க்கிறது என்று வேங்கைவயல் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஆனால் சிபிசிஐடி போலீசார் உண்மை அறியும் சோதனை அனுமதி பெறக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வேங்கை வயல் கிராமத்திற்குள் வெளியாட்கள் நுழையக்கூடாது என்பதற்காக கிராமத்தைச் சுற்றி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வேங்கை வயல் கிராமத்திற்குள் வெளியூரை சேர்ந்தவர்களும், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் வருவதால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கிராமத்தைச் சுற்றி சிறப்புக் காவல் படை காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கிராமத்திற்குள்ளே செல்லும் நான்கு வழிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட இருப்பதாகவும் சிபிசிஐடி குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.