காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு முன் வரவேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக காவிரி விவசாயிகள் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடி அருகே வடகோவனூர், தென் கோவனூர், தட்டான்கோவில், மேலகண்டமங்கலம் பகுதிகளில் கோரையாற்றில் மணல் கொள்ளை நடந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டார். மேலும் அரிச்சந்திரா ஆறு ஆசிய வளர்ச்சி வங்கித் திட்டத்தில் தலைப்பு மதகு சீரமைப்பு பணியினையும் பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், ''காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன ஆறுகள் விளை நிலப்பகுதிகளில் 20 அடி முதல் 50 அடி ஆழம் வரை அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கொள்ளை போகிறது. இதனால் ஆற்றுக் கரைகள் சூறையாடப்பட்டு பாசன காலங்களில் பாசனம் பெற முடியாத நிலை ஏற்ப்படும். வெள்ளக் காலங்களில் உடைப்பெடுத்து பல நூறு கிராமங்கள், விவசாயம் அழியும் பேராபத்து ஏற்படும் என எச்சரிக்கிறோம்.
குறிப்பாக மன்னார்குடி அருகே ஓடும் மிகப் பெரும் பாசன வடிகால் ஆறான கோரையாறு சுமார் 1 லட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன ஆறாகவும், வெள்ளக்காலங்களில் சுமார் 7ஆயிரம் கன அடி வரை உபரி நீரை கடலுக்கு கொண்டு செல்லும் கொள்ளளவும் கொண்டதுமாகும். இவ்வாற்றில் வட கோவனூர் முதல் முத்துப்பேட்டை வரை சுமார் 40 கி.மீ. தூரம் ஆற்று இருகரைகளையும் குடைந்தும், நீரோட்ட பகுதிகளிலும் 30 முதல் 40 அடி ஆழம் வரை மணல் சூரையாடப்பட்டுள்ளதால் மழை வெள்ளக் காலங்களில் உடைப்பெடுத்து மன்னார்குடி முதல் வேதாரண்யம் வரை பேரழிவை ஏற்படுத்தும் பேராபத்து ஏற்ப்பட்டுள்ளது.
இதற்குத் துணை போன இப்பகுதிகளுக்குப் பொறுப்புள்ள பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கொள்ளையர்களை அடையாளம் கண்டு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
காவிரி டெல்டாவில் கடந்த ஆண்டு (2019) ரூ85 கோடி மதிப்பிட்டில் தூர் வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 60% பணிகள் நிறைவுற்றது. மீதம் 40% பணிகள் 2020 பிப்ரவரி மாதம் துவங்கப்படும் என மாவட்ட ஆட்சியர்களால் உத்திரவாதமளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்பணிகளின் நிலை குறித்து தெளிவுப்படுத்தவில்லை.
இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன் ரூ 65 கோடி மதிப்பீட்டில் தூர் வாரும் பணிகள் டெண்டர் விடப்பட்டது. ஒன்றிரண்டு பணிகள் மட்டுமே துவங்கி உள்ளதாகத் தெரியவருகிறது. மற்ற பணிகள் துவங்க முன் வரவில்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் பணிகள் பிரித்தளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். இதனால் பல ஒப்பந்தக்காரர்கள் பணிகளைத் துவங்காமல் காலம் கடத்தி வருவதாகத் தெரிய வருகிறது.
மேலும் வரும் ஜூன் 12 இல் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க குறுகிய நாட்களே உள்ள நிலை உள்ளதால் பாசனம் தடைப்பட்டு, வெள்ளக் காலங்களில் பேரழிவு ஏற்பட்டால் பாதிப்பிற்குச் சட்டமன்ற உறுப்பினர்களே பொருப்பேற்க வேண்டும்.
கோரையாறு தூர் வாரப்படாததால் புதர் மண்டி ஆறு என்ற சுவடே தெரியாமல் உள்ளது. குடிமராமத்து திட்டங்களில் பொதுப்பணித்துறை பொறியாளர்களே பல இடங்களில் தூர் வாரியதாக மோசடி செய்து வருவதாகத் தெரிகிறது.
ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் மேற்க்கொள்ளப்படும் பணிகள் 6 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே இவைகள் குறித்து ஆய்வு செய்து பணிகளைத் துரிதப்படுத்த உயர் மட்டக்குழுவை உடன் காவிரி டெல்டாவிற்கு அனுப்பி வைத்து விவசாயிகள் கருத்தறிந்து துரித நடவடிக்கைகளை மேற்க்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை வலியுறுத்துகிறேன் என்றார்.