சுமார் 9 வருடங்களுக்கு பிறகு ஜூன் 12 ந் தேதி மேட்டூரில், காவிரி தண்ணீர் முதல்வர் எடப்பாடியால் திறக்கப்பட்டு 16ந் தேதி கல்லணையில் பாசனத்திற்காக அமைச்சர்களால் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வரும் வழி எங்கும் விவசாயிகள் மலர் தூவி வரவேற்று வணங்கி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் நீர், தஞ்சை மாவட்டத்திற்குள் நுழைந்து கடைமடைப் பாசனப்பகுதிகளுக்கு இன்று காலை முதல் வரத் தொடங்கிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி தாலுகா தொடங்கி ஆலங்குடி, அறந்தாங்கி தாலுகா வரை சுமார் 25 ஆயிரம் ஏக்கர் வரை நேரடியாகவும், ஏரிகள் மூலமும் பாசத்திற்கு வரவேண்டிய காவிரி தண்ணீர் இன்று காலை முதல் வந்து கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு காலத்தோடு காவிரி வருவதைக் காண வந்த இளைஞர்கள் தங்கள் செல்போன்களுடன் காத்திருந்து செல்ஃபி, முகநூல் நேரலை என படங்களும், வீடியோக்களையும் வெளியிட்டு மகிழ்ந்தனர்.
இன்று காலை நெடுவாசல் வந்த தண்ணீர் மீண்டும் தஞ்சை மாவட்டம் ஆவணம், ஏனாதிகரம்பை, பைங்கால் வழியாக வந்து மீண்டும் புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்திற்குள் மாலை 3 மணிக்கு வந்தடைந்தது. பைங்கால் தண்ணீர் வந்துவிட்டதை அறிந்த மேற்பனைக்காடு விவசாயிகள் பூ, பழம், கற்பூரம், நவதாணி விதைகளுடன் தயாராக காத்திருந்தனர். வீரமாகாளி அம்மன் கோயில் கீழ்பாலத்தில் தண்ணீா் இறங்கியதுமே உற்சாகமடைந்து ஆற்றுக்குள் இறங்கி. அழுக்கும், செடி செத்தைகளுடன் நுரையுடன் வந்த புதிய தண்ணீரில் கால்களை நனைத்து ஆனந்தமடைந்த விவசாயிகள் தயாராக வைத்திருந்த மலர்கள், விதைகளை தூவி கற்பூரம் ஏற்றி வணங்கி வரவேற்றனர்.
பல வருடங்களுக்கு பிறகு காலத்தோடு வரும் காவிரியை வணங்கி வரவேற்கிறோம் கடைமடை வரை கால தாமதம் இன்றி தொடர்ந்து தண்ணீர் வந்து சேர்ந்தால் குறுவையும், சம்பாவும் அறுவடை செய்யமுடியும். அதற்கு இயற்கையும் மழையை கொடுக்க வேண்டும். அரசாங்கங்களும் இணைந்து தண்ணீரை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றனர்.