கடலூர் மாவட்டத்தில் மணல் அள்ளும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்று மணல் அள்ளுவது தடை செய்யப்பட்டது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறும் மாட்டுவண்டி தொழிலாளர்கள், ஆற்று மணல் அள்ள தங்களுக்கு அனுமதிக்க வேண்டி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விருத்தாச்சலம் பாலக்கரையில் நேற்று மாட்டுவண்டி விவசாய தொழிலாளர் நல சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, மணல் குவாரிகள் மூடப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், மாட்டுவண்டி தொழிலாளர்கள் மிகவும் வறுமையில் தவித்து வருவதாகவும், இதற்கிடையில் பல போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனிடையே மாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் பின்னர் திடீரென பாலக்கரை ரவுண்டானா சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் வந்து, சமரசம் செய்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதேசமயம் தமிழக அரசு மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விருத்தாச்சலத்தில் விரைந்து மணல் குவாரி திறக்காவிட்டால் வருகின்ற வெள்ளிக்கிழமை மாட்டு வண்டிகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.