புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு 'பொறந்த ஊருக்கு புகழ சேரு' இயக்க நண்பர்களுடன் ஊர்வலமாக சென்ற ஆடுகள், குதிரை போன்ற கால்நடைகள் வனத்துறை அதிகாரியிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். இந்த மனுவை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பார்வைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
அந்த மனுவில் கூறியிருப்பது,
நாங்கள் மனிதர்களை சார்ந்து வாழும் உயிரினங்கள். ஆம் இந்த மண்ணில் வாழ்ந்து மடிந்து போன எங்களின் முன்னோர்களின் எலும்புக் கூடுகளை திருக்கோகர்ணம் அருங்காட்சியகத்தில் வைத்து இது தான் காட்டு மாடு, இது தான் டைனோசர் என்று விளக்கம் கொடுத்து வருகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் உங்களால் நாங்களும் அப்படி ஒரு காட்சிப் பொருளாக அருங்காட்சியகத்தில் எலும்புக் கூடுகளாக தான் நிற்கப்போகிறோம் என்ற அச்சம் ஏற்பட்டுவிட்டது. அதனால் தான் எங்களுக்கு வாழ்வு கொடுங்கள் என்று கேட்க வந்திருக்கிறோம்.
அரசாங்கத்தின் வனத்தில் அதிகமாக தைல மரங்களை வளர்க்கிறீர்கள். அதனால் அந்த காட்டில் வளர்ந்த புல், பூண்டு மட்டுமின்றி பாம்பு, பூராண், பல்லி கூட அந்த வனங்களில் வாழமுடியவில்லை. முன்னொரு காலத்தில் புதுக்கோட்டை வனங்களில் முயல், மான், நரி, என்று கூட்டம் கூட்டமாக வாழ்ந்தது. அப்பப்ப ஆசைக்கு ராஜா வந்து வேட்டையும் ஆடுவார். அப்படியான வனங்கள் இன்று பாலைவனங்களாகிவிட்டது.
நாங்கள் உண்ண உணவில்லை, குடிக்க தண்ணீர் இல்லை உணவுக்கும், தாகம் தீர்க்க தண்ணீர்க்கும் வெளியிடங்களுக்கு செல்லும் போது வாகனங்களில் அடிபட்டு சாகிறோம். எங்களை வளர்ப்பவர்களுக்கும் மழை தண்ணீர் இல்லாததால் விவசாயம் பொய்த்து அவர்களே பட்டினி கிடக்கிறார்கள். அப்பறம் எப்படி அவர்களும் எங்களை கவனிக்க முடியும்.
அதனால் பசிக்கும் நேரத்தில் சாலை ஓரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தின்ற எங்கள் உறவுகள் துடிதுடித்து செத்துப் போறதை எங்கள் கண்களால் காண முடிகிறது. அப்போது மட்டும் கண்ணீர் சிந்திவிட்டு உணவுக்காக அலையும் நிலையை ஏற்படுத்திவிட்டீர்கள்.
தேசிய பறவை மயில்கள் இன்று எந்த காட்டிலும் இல்லை. காரணம் எல்லாமே தைல மரக்காடுகளாக உள்ளதால் வெப்பம் தாங்க முடியாமலும் உணவு கிடைக்காமலும் வீதி வீதியாக சுற்றி சாலையை கடக்கும் போது வாகனம் மோதி இறக்கிறது. சில நாளுக்கு முன்னால ஆலங்கடி அருகே உணவுக்காக சாலையை கடந்த போது ஒரு தேசிய பறவை அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தது.
இந்த நிலை மாற வேண்டும் என்றால் வனத்துறையான நீங்கள் உங்கள் தைல மரக்காடுகளை முதலில் அழித்துவிடுங்கள். பிறகு எங்கள் பறவைகள் எங்கிருந்தாவது கொட்டைகளை கொண்டு வந்து மரங்களை உருவாக்கி வனமாக்கிவிடும். பிறகு மழை பெய்யும் எங்கள் விவசாயிகள் வாழ்வார்கள் நாங்களும் அருங்காட்சியகம் போகமாட்டோம்.
இப்ப எங்கள் கோரிக்கை புரியும் என்று நினைக்கிறோம். உங்க ஆட்சியாளர்களுக்கும் எங்கள் கோரிக்கையை எடுத்து சொல்லுங்கள். போனவாரம் எங்களுக்காக திருநங்கைகள் தனியார் நிலத்தில் தைல மரங்களை அழித்து பலன் தரும் பழ மரங்களை நட்டார்கள். அவர்களைப் போல வனத்துறையும் செய்தால் நன்றாக இருக்கும்.
எங்களை வாழவிடுங்க.. இல்லைன்னா ஒட்டுமொத்தமா கொன்னு போடுங்க என்று உருக்கமான மனுவை கொடுத்தார்கள்.
தைல மரங்களால் மழை இன்றி வறட்சி மாவட்டமாக இருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தை வளமான பூமியாக்க திருநங்கைகளை தொடர்ந்து கால்நடைகளும் கிளம்பிவிட்டது. இவர்களுக்கு துணையாக பொறந்த ஊருக்கு புகழ சேரு. புதுக்கோட்டை நண்பர்களும் செயல்பட தொடங்கியுள்ளனர். இதன் பிறகாவது வனத்துறையும் தமிழக அரசும் கவணிக்குமா? இல்லை மண்ணு தரிசானால் நமக்கு என்ன என்று வழக்கம் போல மனுவை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தைல மரக்கன்றுகளை நடவு செய்யுமோ பொருத்திருந்து பார்ப்போம்.