விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள காணிமேடு, கந்தன் பாளையம், மண்டகப்பட்டு, போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் பசுமாடுகள் ஏராளம் வளர்த்து வருகிறார்கள். அந்த மாடுகளுக்கு தற்போது மர்ம நோய் பரவல் ஏற்பட்டுள்ளது. அதில் காணிமேடு விவசாயி ஒருவரது பசு மாடு நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் இறந்து போனது. அதேபோல் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகில் உள்ள அறியராவி, ஓ. கீரனூர். திருமலை அகரம். நந்திமங்கலம். வடகரை, தாழநல்லூர்உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிக அளவு ஆடு மாடுகளை விவசாயிகள் வளர்த்து வருகிறார்கள். அப்பகுதி கால்நடைகளுக்கு மர்ம நோய் பரவி வருகிறது.
சமீபத்தில் அரியராவி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரது இரண்டு பசு மாடுகளுக்குக் கழுத்தில் அம்மை நோய் ஏற்பட்டு நாட்டு மருந்து வைத்தியம் செய்து வருகிறார். அதே பகுதியில் உள்ள விவசாயிகள் சிலரது ஆடு மாடுகளுக்கும் கழுத்தில் மர்ம நோய் தாக்கி உள்ளது. எனவே இந்த நோய் மிக வேகமாகப் பரவி வருவதால் கால்நடைத் துறை அதிகாரிகள் உடனடியாக கிராமப்புறங்களுக்கு மருத்துவர்களை அனுப்பி கால்நடைகளுக்குத் தடுப்பு முகாம் அமைத்து நோய் பரவாமல் தடுத்து கால்நடைகள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், உடனடியாக முகாம் அமைத்துத் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.