
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்கள், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி புதிய ஊதியத்திற்குரிய 21 மாதகால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும், பணியாளர் பகுப்பாய்வு குழுவினை அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 22.01.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மக்கள் பணியில் பாதிப்பு ஏற்பட்டது, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், மக்களின் நலனுக்காக பணியாற்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், நிர்வாகக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவும் சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாக, 7,898 அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவை அனைத்தும் தற்போது ரத்து செய்யப்படுகின்றன" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.