2020ம் ஆண்டுக்கான தூய்மை நகர கணக்கெடுப்புக்கான முடிவுகளை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில் தேசிய அளவில் இந்தூர், குஜராத், சூரத், நவி மும்பை ஆகிய நகரங்கள் முதல் முன்று இடங்களை பிடித்துள்ளது.
ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் வரை மக்கள் தொகைகள் கொண்ட நகரங்கள் பிரிவில் 382 நகரங்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டன. இதில் திருச்சி அகில இந்திய அளவில் 102 இடத்தை பிடித்தது.
தமிழக அளவில் 25 நகரங்களுக்கு இடையே ஆன போட்டியில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் 6,000 மதிப்பெண்களுக்கு 3,360 மதிப்பெண்கள் வாங்கியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 13வது இடத்தையும், 2019 ஆண்டு 39வது இடத்தையும் பெற்றிருந்த திருச்சி 63 இடங்கள் பின்னுக்கு தள்ளி 102 இடத்தை பிடித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் பத்திரிகையாளர்களிடம், “குறைந்த மக்கள் தொகை நகரங்களில் திட்டங்களை செயல்பத்துவதிலும், 10 இலட்சம் வரை மக்கள் கொண்ட திருச்சி மாநகரில் செயல்படுத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. விருதுக்காக இல்லாவிட்டாலும் மாநகரை தூய்மையாக பராமரித்து சுகாதரத்தை மேம்படுத்தும் வகையில் மாநகராட்சியில் தொடர்ந்து தூய்மை திட்டத்தை மக்கள் ஆதரவுடன் தொடர்ந்து செய்வோம்” என்றார். தமிழக அளவில் திருச்சி முதல் இடத்தை பிடித்து இருந்தாலும் அகில இந்திய அளவில் தொடர்ச்சியாக திருச்சி பின் தங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.