கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டையைச் சேர்ந்தவர் சிவக்குமார்(30). இவர் கொலை வழக்கில், வேலூர் மத்தியச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில், வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமியின் வீட்டில், வீட்டு வேலைகளைச் செய்ய சிறைத்துறை வார்டன்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது ரூ.4.50 லட்சம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கைதி சிவக்குமார் திருடியதாகக் குற்றச்சாட்டை முன்வைத்து சிறைத்துறை வார்டன்கள் கண்மூடித்தனமாகத் தாக்கி சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், எனது மகன் சிறைத்துறை டிஐஜி வீட்டில் திருடியதாக சிறையில் தனி அறையில் அடைத்து வைத்து வார்டன்கள் சித்ரவதை செய்துள்ளனர். எனது மகனுக்கு உரியச் சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி வியாழன் கிழமை அன்று இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வு ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் தாக்கப்பட்டது தொடர்பாக வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் சிறைத்துறை கண்காணிப்பாளர் ரகுமான், சிறைத்துறை ஜெயிலர் உட்பட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது சிபிசிஐடி போலீசார் குற்றவழக்குப் பதிந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி சிவகுமாரை உடனடியாக சேலம் மத்தியச் சிறைக்கு மாற்ற வேண்டும். சிறைத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிந்து, நடவடிக்கை தொடர்பாக சிபிசிஐடி அறிக்கையை அரசிடம் வருகிற 17-தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவு சென்னை சிபிசிஐடி போலீசார், வேலூர் சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி, சிறை கூடுதல் எஸ்.பி அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன், டிஐஜி தனி பாதுகாப்பு அதிகாரி ராஜூ, சிறை போலீசார் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா தமிழ்ச்செல்வன், விஜி, பெண் போலீசார் சரஸ்வதி, செல்வி, சுரேஷ், சேது ஆகிய 14 பேர் மீது சட்ட விரோதமாகக் கட்டாய வேலை வாங்குதல், சட்ட விரோதமாக சிறை வைத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், கைதி சிவக்குமார் தாக்கப்பட்டது குறித்து நேரடி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சிறைக்குள் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்கே சிறை கைதிகள், சிறை வார்டனங்கள், காவலர்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர். இது தொடர்பாகச் சேலம் மத்திய சிறையில் கைதி சிவகுமாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.