கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் - செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி மர்மமான முறையில் மாடியில் இருந்து விழுந்து மரணம் அடைந்தார். ஸ்ரீமதி வழக்கு என தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், இந்த வழக்கில் ஸ்ரீமதியின் தாயார் தரப்பில் வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகியுள்ளார்.
இன்று இந்த வழக்கின் விசாரணைக்கு பிறகு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் ப.பா.மோகன் பேசுகையில், ''கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஸ்ரீமதியுடைய மர்மமான மரணம் குறித்து அவருடைய தாயார் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய புலன் விசாரணை நடத்தப்படாததால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அப்படியும் கூட இந்த வழக்கில் உரிய முறையில் விசாரணை செய்யப்படாமல் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கக் கூடிய ஐந்து பேரையும் விடுவிக்கப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட போதே இது உண்மைக்கு மாறான, இயற்கைக்கும் மாறான மரணம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்கு காரணம் அங்கு இருக்கக்கூடிய நிர்வாகத்தில் உள்ள சில முக்கியமான புள்ளிகள், அவர்களுக்கு பின்னால் இருக்கின்றவர்கள் என்று சொல்லி பலமுறை அவருடைய தாயார் செல்வி கூறியும் கூட இந்த வழக்கில் காவல்துறை தலைமையாக அன்றைக்கு இருந்த டிஜிபி இந்த வழக்கை இது தற்கொலை என்று முன்னறிவிப்பாக கொடுத்துவிட்டார்.
அது மட்டுமல்ல உடற்கூறு ஆய்வு செய்கிற பொழுது கோகுல்ராஜ் வழக்கைபோல மூன்றாவது சிறப்பு மருத்துவர் போட வேண்டும் என்று சொல்லி மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு சென்னையிலே வாதிட்டார். அப்பொழுது நீதிபதி சதீஷ்குமார் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. முதலாவதாக செய்யப்பட்ட உடற்கூறாய்விலேயே தவறு இருந்தது என்பதை அவர்களே பார்த்தார்கள். உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள், எலும்பு முறிவு ஆகியவை குறிப்பிடப்படவில்லை. ஆகவே நீதிமன்றமே இரண்டாவது முறையாக ஒரு குழுவாக மருத்துவர்களை போட்டு ஆய்வு செய்ய சொன்னார்கள். அப்பொழுதும் கூட தொடர்ந்து போராடியும் நாம் கேட்கிற மூன்றாவது மருத்துவர் நியமிக்கப்படவில்லை. ஆகவே அந்த மருத்துவருடைய அறிக்கை வைத்துக் கொண்டும், காவல்துறையில் கொடுத்து இருக்கக்கூடிய ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை வைத்துக் கொண்டும் குற்றம் சாட்டப்பட்ட ரவிக்குமார் மற்றும் அவரை சார்ந்து இருக்கக்கூடிய நான்கு பேரும் பிணை கேட்டு போராடிய போது உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸ் போட்ட ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை வாங்கிக்கொண்டு இது ஒரு தற்கொலை என்று சொல்லி முன்கூட்டியே அவர்கள் அறிவித்தார்கள்.
ஒரு வழக்கு புலனாய்வு செய்து முழுமையாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகுதான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார் என்று சொல்ல வேண்டும். அதற்கு முன்பாகவே நீதிபதிகள் கூறிய கருத்து ஏற்புடையது அல்ல என்பதனால் உச்சநீதிமன்றத்தை அணுகினார் செல்வி. உச்சநீதிமன்றம் இவ்வாறு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே இது தற்கொலை என்று சொல்கியது. பின்பு அந்த அப்சர்வேஷனை நீக்கிவிட்டு இப்பொழுது வழக்கில் புலனாய்வு செய்ய சொன்னார்கள். ஆனால் அப்பொழுதே, உச்சநீதிமன்றத்தில் காவல்துறை வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு விட்டது என்று சொன்னார்கள். ஆனால் இந்த வழக்கில் முழுமையாக புலன் விசாரணை செய்யாமல் கடந்த மே மாதம் இந்த வழக்கில் பிரிவு 305 ( சிறார்களை தற்கொலைக்கு தூண்டப்படுதல்) உள்ளிட்ட சிறார் சம்பந்தப்பட்ட இரண்டு சட்டங்களையும் நீக்கிவிட்டு விடுதி முறைப்படி அனுமதி பெறாமல் நடத்திருக்கிறார்கள் என்ற ஒரே ஒரு குற்றச்சாட்டை மட்டும் போட்டு இந்த வழக்கை முடித்து விட்டார்கள்.
வழக்கு முடிக்கப்பட்ட க்ளோசர் ரிப்போர்ட்டை விழுப்புரத்தில் இருக்கக்கூடிய சி.ஜே கோர்ட்டில் தாக்கல் செய்தார்கள். அதைத் தாக்கல் செய்த பொழுது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி யார் புகார் தராரோ அவருக்கு முறைப்படி அழைப்பாணை கொடுத்து ஆட்சேபனை கேட்க வேண்டும். அந்த வகையில் கேட்கப்பட்டது. நாங்கள் விழுப்புரத்தில் வாதாடினோம். அதன் பிறகுதான் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வந்த பின்னால் கடந்த முறை வந்து வாதாடினேன். அப்போது அரசு தரப்பில் ஆஜரானவர்கள் வாய்தா கேட்டார்கள். ஆகவேதான் இன்றைக்கு முழுமையாக இந்த வழக்கில் நான் இரண்டு முக்கியமான ஆவணங்களைக் கேட்டிருக்கிறேன். எஃப் ஐ ஆர், ஃபார்ம் 91 ல் இருக்கக்கூடிய புத்தகங்களை நாங்கள் கேட்டிருக்கிறோம். சிசிடிவி காட்சிகளைப் பொறுத்தவரையில் 26 சிசிடிவிகள் ஓபன் செய்யப்படவில்லை என எக்ஸ்பர்ட்கள் சொல்கிறார்கள். அதோடு சேர்ந்து சம்பவம் நடந்த அன்று காலையில் காவல்துறைக்கும் சாந்திக்கும், ரவிக்குமாருக்கும் இடையேயான தொலைத்தொடர்பு, செல்விக்கு கொடுத்திருக்கக் கூடிய தொலைத்தொடர்பு பற்றிக் கேட்டிருக்கிறோம். அதைப்பற்றி இன்று நீதிபதி முழுமையாக கேட்டார். அரசு தரப்பில் வாதாடுவதற்காக மீண்டும் வாய்தா கேட்டு 28/5/20 24 ஆம் தேதி வய்தா போடப்பட்டுள்ளது'' என்றார்.