அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உயர்மட்டக் குழு இரண்டாவது நாளாக விசாரணை நடத்தியது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று நேரில் ஆஜர் ஆகினர்.
இதன் பின் பாதிக்கப்பட்டவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். நல்ல முறையில் தான் விசாரணை செய்தார்கள். விசாரணை முடிந்ததும் அவர் மேல் வழக்கு போட்டுள்ளதாக சொன்னார்கள். வழக்கு போட்டுள்ளதாக அமுதா ஐஏஎஸ் சொல்லவில்லை. செய்திகளில் பார்த்ததால் தெரிந்தது. அவர் மேல் மட்டும் கேஸ் போடக்கூடாது. எங்களை அடிக்கும்போது உடன் இருந்த காவல்துறையினர் அத்தனை பேரையும் கைது செய்ய வேண்டும்.
பல்வீர் சிங், சதாம், விக்னேஷ், எஸ்ஐ முருகேசன் இன்னும் பெயர் தெரியாத இரண்டு ஆட்கள் எங்களை அடித்தனர். மற்ற காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் சொன்னோம். நடவடிக்கை எடுப்பதாக சொல்லியுள்ளார்கள். தெளிவாக விசாரித்துள்ளார்கள். நம்பிக்கை உள்ளது. முழுமையாக விசாரித்த பின்பே தெரியும். பேசியதை டைப் செய்து முடித்த பின் அதை படிக்கச் சொல்லி வீடியோ எடுத்தார்கள். பல் உடைந்ததை புகைப்படம் எடுத்தார்கள்” எனக் கூறினார்.