கரூர் மாவட்டத்தில் தாந்தோனி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வரும் வினோத்குமார், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும் வீடியோ பதிவுகள் செய்யவும், VST Team 1 ன் அதிகாரியாக கரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் நியமனம் செய்யப்பட்டு தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பணிக்காக அரசு வாகனம் வழங்கப்பட்டு, ஓட்டுநராக கங்காதரன், வீடியோ கிராஃபர் வீடியோ கேமராவுடன் வழங்கப்பட்டு தேர்தல் பணியை செய்து வருகிறார்.
கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் மார்ச் 31ஆம் தேதி அதிமுக கட்சியின் கரூர் பாராளுமன்ற வேட்பாளர் தங்கவேல் என்பவருக்கு தெருமுனை தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டி, மண்மங்கலம் தாலுகா கரைப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கார்த்திக் என்பவர் அனுமதி கேட்டு மனு செய்திருந்த நிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது
கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கரூர் சட்டமன்ற தொகுதியில் மார்ச் 31ஆம் தேதி காலை முதல் முதல் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் தங்கவேல் என்பவருடன் அவரை ஆதரித்து, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் அதிமுக கரூர் மாவட்ட செயலாளர், விஜயபாஸ்கர், அதிமுக கட்சியைச் சேர்ந்த ரமேஷ்குமார் , அதிமுக கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசூதணன் வேலாயுதம்பாளையம், கார்த்திக் கரைப்பாளையம், ஜெகன் உள்ளிட்ட பலர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் பிரச்சார வாகனத்துடன் தெருமுனை பிரச்சாரம் செய்து வந்தனர்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்படி, தெருமுனை பிரச்சாரத்திற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சமார் 10 கார்களுக்கு மேல் வேட்பாளருடன் தெருமுனை பிரச்சாரத்திற்கு அணிவகுத்து வந்தது. அப்போது நெரூர் அருகே உள்ள அரங்கநாதன்பேட்டை என்ற ஊரில் தெருமுனை பிரச்சாரத்தின்போது ஜெகன் என்பவரிடம் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றும்படியும், வாகனங்கள் அணிவகுத்து வர தேர்தல் விதிமுறைப்படி அனுமதி இல்லை என்றும் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் வினோத்குமார் கூறியுள்ளார் .
அதனை தொடர்ந்து மதியம் 02.45 நெரூர் அருகே உள்ள மறவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் அதிமுக கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்கவேல் தேர்தல் பிரச்சார வாகனங்களுக்கு பின்னால் தேர்தல் கண்காணிப்பு குழுவுடன் அரசு வாகனத்தில் சென்றபோது, கரூர் மாவட்ட அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக கட்சியைச் சேர்ந்த ரமேஷ்குமார், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசூதணன், கார்த்திக், ஜெகன் மற்றும் பலர் தேர்தல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சென்ற அரசு வாகனத்தின் முன்பு சட்டவிரோதமாக ஒன்று கூடி, வழிமறித்து தேர்தல் பணியை செய்ய விடாமல் தடுத்து வாகனத்திற்குள் இருந்த தேர்தல் கண்காணிப்பு பிரிவு அதிகாரி வினோத்குமாரை பார்த்து, " நீ ஓவரா பண்ற"," வண்டிய தேக்குயா பார்க்கலாம்", என்றும், "யோவ் என்றும் ஓவரா ரூல்ஸ் பேசுகிறாய்" என்றும், "கேஸ் தான போடுவ போட்டுக்கோ" என ஒருமையில் பேசியுள்ளனர். மேலும் ரமேஷ்குமார் என்பவர் வினோத் குமாரை ஆபாசமாக பேசியும் வாகனத்தை சூழ்ந்துகொண்டும் வீடியோ கிராஃபர் ஹரிஹரன் என்பவரை வீடியோ பதிவு செய்ய விடாமல் தடுத்தும், கொன்னுருவோம் என கொலை மிரட்டல் விடுத்ததோடு அனைவரும் வினோத்குமாரை தாக்க முற்பட்டனர்.
அப்போது அங்கிருந்த காவலர்கள் அவர்களிடமிருந்து பாதுகாப்பாக தன்னை மீட்டதாக வினோத்குமார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வாங்கல் காவல் நிலையத்தில் வினோத் குமார் அளித்த புகார் அடிப்படையில் , முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.