ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக பல்வேறு தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டு பற்றி ஆய்வு செய்ய, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜூன் மாதம் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழகச் சட்டமன்றத்தில் கடந்த 19 ஆம் தேதி அவசரச் சட்டத்திற்கு மாற்றாக நிரந்தர தடை சட்டம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் இதற்கான மசோதாவைத் தாக்கல் செய்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் தடை சட்டத்தை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை சூதாட்டம் என அறிவித்து பிறப்பித்த தடை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தலைமையிலான அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இதுபோன்று தொடரப்பட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இவ்வழக்கு அதில் ஒன்றாக விசாரிக்கப்படும் எனக் கூறப்பட்டு வழக்கு விசாரணையானது நவம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.