சேலத்தில், 90 ஆயிரம் ரூபாய் கடனுக்காக 55 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் பறித்துக் கொண்டதாக 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் அருகே உள்ள நிலவாரப்பட்டியைச் சேர்ந்தவர் கருணாகரன் (55). இவர், பிரபாகரன் என்பவரிடம் தனக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை அடமானம் வைத்து, அவசரத் தேவைக்காக 90 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். இதற்கிடையே, பிரபாகரன் போலி ஆவணங்கள் தயாரித்து, கருணாகரனுக்குச் சொந்தமான நிலத்தை தனது தந்தை பெயரில் தாதகாப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் பதிவு செய்து கொண்டார்.
இதையறிந்து அதிர்ச்சி அடைந்த கருணாகரன், இதுகுறித்து சேலம் மாநகர நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். 90 ஆயிரம் ரூபாய் கடனுக்காகத் தனக்குச் சொந்தமான 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தைச் சட்ட விரோதமாகத் தன் பெயருக்கு எழுதிக் கொண்டதாக பிரபாகரன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவருடைய தந்தை கந்தசாமி மற்றும் மருத்துவர் கந்தசாமி, ராஜகோபால், பரமசிவம், கலைச்செல்வி, அஜித், பழனியம்மாள் உள்பட 8 பேர் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பிரபாகரன் உள்ளிட்ட 8 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.