Skip to main content

தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

Case filed against MR Vijayabaskar on Election Officer's complaint

 

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தன. பின்னர் மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று (22/10/2021) நடைபெற்றது. நடந்த முடிந்த தேர்தலில் பெரும்பாலான மாவட்டங்களில் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்களாக அதிமுகவைச் சேர்ந்த 8 பேர் உள்ளனர். அதேபோல், திமுகவைச் சேர்ந்த 4 பேர் மாவட்ட கவுன்சிலர்களாக உள்ளனர்.

 

இச்சூழலில் கரூர் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். அதேபோல், இரு கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்களும் வாக்களிப்பதற்காக வந்தனர். இந்நிலையில், மதியம் 02.30 மணிக்கு அங்கு வந்த தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் ஒத்திவைப்பதாகக் கூறிவிட்டு, காரில் புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக கவுன்சிலர்கள், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அதிமுகவின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் தேர்தல் அலுவலரின் காரை முற்றுகையிட்டு, தேர்தல் ஒத்திவைப்பதற்குக் காரணம் என்ன என கூறுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

 

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மாவட்ட கவுன்சிலர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். கரூரில் தேர்தல் அதிகாரியின் காரை மறித்து அத்துமீறிய விவகாரம் தொடர்பாக முன்னால் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரி மந்திராச்சலம் புகார் அளித்தார். அதன் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்