கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என ஆசை வலை விரித்து, சேலம் நகைப் பட்டறை உரிமையாளரிடம் 23 லட்சம் ரூபாய் மோசடி செய்த தலைமைக் காவலர் மீது மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் தாதகாப்பட்டி குமரன் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (41). செவ்வாய்ப்பேட்டையில் நகைப் பட்டறை நடத்தி வருகிறார். இவர், சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: என்னுடைய நண்பர் முருகன். இவர் மூலமாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வரும் முத்துசாமி என்பவர் அறிமுகம் ஆனார். அவர், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பிய நானும் அவரிடம் 47 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். ஆனால் அவர் உறுதியளித்தபடி என் முதலீட்டுக்குக் கூடுதல் வருமானம் எதுவும் கொடுக்கவில்லை.
இதையடுத்து என்னுடைய அசல் பணத்தையாவது கொடுத்துவிடும்படி கேட்டு வந்தேன். அவரும் சில தவணைகளில் 24 லட்சம் ரூபாய் திருப்பிக் கொடுத்து விட்டார். மீதம் உள்ள 23 லட்சம் ரூபாயைத் திருப்பிக் கொடுக்காமல் முத்துசாமி கடந்த 2 ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறார். அவரிடம் இருந்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செந்தில்குமார் தனது புகாரில் கூறியிருந்தார். இந்தப் புகார் மீது மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் முதல்கட்ட விசாரணை நடத்தியதில் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தலைமைக் காவலர் முத்துசாமி மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.