தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் இரண்டுக்குமான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, பாஜக, தேமுதிக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பூ, தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது, கோடம்பாக்கம் பகுதியில் வழிபாட்டுத் தலங்கள் முன்பு பிரச்சாரம் செய்ய குஷ்பூவுக்கு காவல்துறையினர் அனுமதி தரவில்லை. இருப்பினும் குஷ்பூ மசூதி அருகே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதால், அவர் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறி செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கோடம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, பிரச்சாரம் செய்ய அனுமதி தருவதற்கு சுயேச்சை வேட்பாளரிடம் லஞ்சம் கேட்ட சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.