புதுச்சேரி அடுத்த கீழ்சாத்தமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் கன்னியப்பன்(55). இவர் வாத்துப் பண்ணை நடத்தி வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த, (6 வயது முதல் 14 வயது உள்ள) ஐந்து சிறுமிகளை, அழைத்து வந்து, தங்க இடம் கொடுத்து, கடந்த 2 வருடங்களாக வாத்து மேய்ப்பதற்குப் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், இவர்களைக் கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக வந்த புகாரையடுத்து புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவினர், கடந்த 23-ஆம் தேதி சோதனையிட்டபோது, அங்கு 5 சிறுமிகளைக் கண்டுள்ளனர். குழந்தைகள் நலக் குழுவினர் 2 குழந்தைகளை மீட்டனர். பிறகு தொடர்ந்து ஆய்வு செய்ததில் மேலும் 3 குழந்தைகளையும் மீட்டுள்ளனர்.
அவர்களை மீட்டு புதுச்சேரியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். அவர்களை விசாரணை செய்ததிலிருந்து, வாத்து வளர்ப்புப் பண்ணையில், சுமார் 7 வயது முதல் 13 வயது வரையுள்ள 5 சிறுமிகளை, வாத்து மேய்க்க கொத்தடிமைகளாக வைத்துள்ளது தெரியவந்தது. மேலும், அந்தச் சிறுமிகளின் பெற்றோர்களிடம் ஒரு சிறுமிக்கு ரூபாய் 3,000 வீதம் கொடுத்து, இவர்களது வேலைக்காகப் பயன்படுத்தி வந்துள்ளதும், விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து வாத்துப் பண்ணை உரிமையாளர்கள் மீது சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டது, பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவருக்கு எதிரான வன்கொடுமை செய்தல் மற்றும் சிறுமிகளைக் கொத்தடிமைகளாக வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகள் நலக் குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனிடையே, காவல் துறையினர் இந்த வழக்கை விசாரணை செய்த நிலையில், மீட்கப்பட்ட சிறுமிகள் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகத் தெரியவந்தது. அதனையடுத்து கொத்தடிமைகளாக இருந்த சிறுமிகள், கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை குழந்தைகள் நலக் குழு உறுதிசெய்தது.
ஆரம்பத்தில் இது தொடர்பாக, சிறுமிகள் ஏதும் தெரிவிக்கவில்லை. தொண்டு நிறுவனத்தினர் மூலம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி தந்தனர். அப்போது, அவர்களிடம் விசாரித்தபோது, பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது குறித்து தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமிகளில் 13 வயதுடைய சிறுமி கருவுற்று இருக்கிறார். மேலும், மற்ற சிறுமிகளின் நிலை மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகுதான் தெரியவரும். இந்த குற்றச் சம்பவத்தில், 10 நபர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளை வாத்து மேய்க்கும் பண்ணையில் தங்க வைத்து, தொடர்ந்து அவர்களை அடிமைகளாக நடத்தி, இதுபோன்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நேற்று முன்தினம் (08.11.2020) வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமிகள் வேலை செய்யும் இடத்தில் உரிமையாளர் அவரது மகன், உறவினர்கள் மற்றும் அங்கே வேலை பார்த்து வரும் நபர்கள் எனச் சுமார் 10 நபர்கள், தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அந்தச் சிறுமிகளோ இவையனைத்தும் என்ன என்று தெரியாமலேயே அங்கு இருந்துள்ளனர். மேலும், இந்தச் சிறுமிகளின் வளர்ப்பு தந்தை அய்யனாரும் பாலியல் வல்லுறவு செய்துள்ளார். அவர் தற்போது தலைமறைவாக இருக்கிறார். இதுவரை இந்த குற்ற வழக்கில், 6 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 4 நபர்களை தேடி வருகின்றனர். மேலும், சிறுமிகளை மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை வரும் பட்சத்தில் எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும் எனக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் தொல்லை கொடுத்ததாக பண்ணை உரிமையாளர் கன்னியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் ராஜ்குமார், பசுபதி, சிவா, அய்யனார், மூர்த்தி ஆகியோர் மீது, 'மோசமான பாலியல் தாக்குதலில் ஈடுபட்டது', 'பாலியல் துன்புறுத்தல்', 'சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பது', 'குழந்தைகளை சித்திரவதை செய்தது', 'போக்சோ' உள்ளிட்ட ஐந்து பிரிவுகளுக்கு மேல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், இருவர் 18 வயதுக்குட்பட்டவர்கள். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய, தலைமறைவாக இருக்கும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.