பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை மீறி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொழிற்படிப்புகளை நடத்த தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை, அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர், பல்கலைக்கழக மானியக்குழு ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அதில், பல்கலைக்கழக மானியக்குழு தொலைதூர கல்வி முறையில் மருத்துவம், பொறியல், விவசாயம், சட்டம், நர்சிங், பல் மருத்துவம், ஃபிசியோதரப்பி போன்ற படிப்புகளை தடை செய்து 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் திறந்தநிலை மற்றும் தொலைத்தொடர்பு விதிகள் 2020லும் மேற்குறிப்பிட்ட படிப்புகளைத் தடை செய்தது மட்டுமின்றி, நேரடி முறையில்தான் பயில வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இதுபோல அங்கீகாரம் இல்லாத படிப்புகளை நடத்திவருவதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படைகிறது என மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2015 முதல் தொலைதூரக் கல்வி நடத்த அனுமதி பெறவில்லை. எனவே, பல்கலைக்கழக மானியக் குழுவால் தடை செய்யப்பட்ட படிப்புகளை அண்ணாமலை பல்கலைக்கழகம் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி முறையில் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரடங்கிய அமர்வு முன்பு இன்று (21.09.2021) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை, அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் பல்கலைக்கழக மானியக்குழு ஆகியோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பிடம் நீதிபதிகள், தினந்தோறும் பொதுநல வழக்கு தொடர்வீர்களா என்று கேள்வி எழுப்பினர். நாளை என்ன வழக்கு தொடர்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் பொது நல நோக்கில்தான் வழக்கு தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.