
தாயை வீட்டிற்குள் பூட்டி வைத்தது தொடர்பாக, இரண்டு மகன்கள் மீது மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், காவேரி நகரைச் சேர்ந்த ஞானஜோதி என்ற மூதாட்டியை அவரது மகன்கள் வீட்டிற்குள் பூட்டி வைத்து உணவு வழங்காமல் கொடுமைச் செய்வதாக, சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், சோதனை மேற்கொண்ட சமூக நலத்துறை அதிகாரிகள், வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட ஞானஜோதியைப் பத்திரமாக மீட்டனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனிடையே, ஞானஜோதியை அவரது மகன்கள் ஒழுங்காக கவனித்து வந்ததாக, அண்டை வீட்டார் தெரிவித்துள்ளனர். மேலும், மூதாட்டி சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால, பாதுகாப்பு கருதி வீட்டைப் பூட்டி வைத்திருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், ஞானஜோதியின் மூத்த மகனான காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் இளைய மகன் வெங்கடேசன் மீது காவல்துறையினர் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.