கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முறைகேடு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையும், மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக விசாரணை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.
அப்போது இரண்டு மாதத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர். அவ்வாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தால் சிறப்பு புலானாய்வு குழு அமைக்க நேரிடும் என தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்துதான் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.
இந்நிலையில் அரசு வேலை வாங்கி தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் 6 மாதம் அவகாசம் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வரவுள்ளது.