வருமானத்திற்கு அதிமாக சொத்துக் குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மறு ஆய்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 7ஆம் தேதி முதல் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2002 ஆம் ஆண்டு பொன்முடி, அவருடைய மனைவி ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு வேலூருக்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி பொன்முடி மற்றும் அவருடைய மனைவியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த விடுதலை உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கினுடைய இறுதி விசாரணை ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி தொடங்கும் என்றும் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை தினம் தோறும் இந்த விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளார். ஏப்ரல் 7 முதல் 17 ஆம் தேதிக்குள் இறுதி விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.