Skip to main content

ஓபிஎஸ், ரவீந்திரநாத் மீது வழக்கு... 5 பேர் கொண்ட குழு அமைப்பு!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Case against OPS, Rabindranath ... Group of 5 people!

 

ஓபிஎஸ், ரவீந்திரநாத் மீதான வழக்கினை விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கபட்டுள்ளது. 

 

தேனி மாவட்டத்தில் உள்ள போடி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான   ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் இவரது மகனும் தேனி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான ரவீந்திரநாத் ஆகிய இருவர் மீதும் தேனி மாவட்ட முன்னாள் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மிலானி, தேனி மாவட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 30- ஆம் தேதி அன்று தனித்தனியே இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார். 

 

அதில், கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ரவீந்திரநாத், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது பிரமாண பத்திரத்தில் முழுத்தகவல் தெரிவிக்கவில்லை. சொத்து விபரம், வருமானத்தை மறைத்துள்ளனர். பொய்யான தகவல் கூறி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். 

 

இந்த மனுக்களை மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் விசாரித்தார். அதன் அடிப்படையில் தனித்தனி உத்தரவுகள் பிறப்பித்தார். அந்த உத்தரவில், புகார்கள் தொடர்பாக மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை அறிக்கையை பிப்ரவரி 7- ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இருவரையும் வாரண்ட் இன்றி கைது செய்யக்கூடாது. எதிர் மனுதாரர்கள் அரசியல் செல்வாக்கு இருப்பதால், மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

 

தேனி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் படி, மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி, 156 (3) பிரிவின் கீழ் ஓ.பன்னீர்செல்வம்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ரவீந்திரநாத் எம்.பி., மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 156 (3) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ், ரவீந்திரநாத் ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனு ஆவணங்களை  இக்குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்